கோவை: கோவையில் உள்ள வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி மர்மமாக உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கத்தின் மகள் தரணிகா, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு செல்பேசியில் தொடர்புகொண்டு, மாணவி தர்ணிகா விடுதி கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த கோவை விரைந்தனர்.
இதனிடையே மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் தங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில், மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வருவதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





