கோவை : கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து 60 கிலோ செம்பு கம்பிகளை திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (27) என்பவர், குனியமுத்தூர் கே.ஜி.கே. சாலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூன் 29-ஆம் தேதி இரவு, அவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 60 கிலோ எடையுள்ள செம்பு கம்பிகளை திருடிச் சென்றனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிப் (25), உக்கடம் புல்லுகாடு பகுதியைச் சேர்ந்த முகமது யாசர் என்ற அப்பு (24), கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த ஜாபர் அலி (31) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து சுமார் 14.750 கிலோ செம்பு கம்பி மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பர்னபாஸ் என்ற நான்காவது நபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





