கோவை: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிணத்துக்கடவில் தங்க உள்ளார்.
சென்னை வருவாய் நிருவாக மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு செயலர் அவர்களது கடிதத்தில் அறிவுறுத்தியதின் பேரில், மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு வட்டத்தில் தங்கியிருந்து அங்கேயே கள ஆய்வில் ஈடுபட்டு, அந்த வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இதனை முன்னிட்டு 23.07.2026 அன்று காலை 9 மணி முதல் 24.07.2026 காலை 9 மணி வரை கிணத்துக்கடவு வட்டத்திலேயே மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதல் நிலை துறை தலைமை அலுவலர்கள் தங்கியிருந்து அனைத்து பகுதிகளிலும் கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும் ஆய்வின் போது சந்திக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும் அரசின் நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள அனைத்து 35 கிராம நிர்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட துறை தலைமை அலுவலர்களால் 23.07.2026 அன்று காலை 11.00 முதல் 12.00 மணி வரை பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது.
ஒவ்வொரு கிராமத்திற்கும் என சிறப்புப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்களிடம் பொதுமக்கள் அந்தந்த கிராமப் பகுதிகளிலேயே மனுக்களை வழங்கலாம் மற்றும் பிற்பகல் கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனு அளித்து பயன் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் கிணத்துக்கடவு 1 பேரூராட்சி, 34 கிராம பஞ்சாயத்துகள் என வட்டத்தில் உள்ள 35 கிராமங்களில் நடைபெற உள்ளது. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன் பெறும் வகையில் கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்திற்கேற்ப நன்கு விளம்பரம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அரசின் அனைத்து திட்டத்தின்கீழ் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





