தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும் வலுவான தொழில்துறை பகுதியான சிட்கோவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், வர்த்தக கண்காட்சிகளுக்கும் பெயர் போன கொடிசியாவும், எல்காட் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள டைடல் பார்க்கும் தான்.
பருத்தியும்… மில்களும்…
காரணம், பருத்து சாகுபடிக்கு உகந்த சூழலையும், ஏராளமான டெக்ஸ்டைல் மில்கள் இயங்கி வருவதால், கோவை ஜவுளித்துறையில் முன்னணி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. கோவையைச் சுற்றி செழிப்போடு இருந்த பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கரில் பருத்து விவசாயம் பிரதான தொழிலாக இருந்தது. அதாவது, கி.மு., 3ம் நூற்றாண்டு காலகட்டங்களிலேயே கோவையில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிப்பொருட்கள், வடகிழக்கு மாநிலங்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டன. உயர்பட்டு ரகங்கள் அனைத்தும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கோவையின் பாரம்பரியமான கோவை காரா காட்டன் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது.
மிகவும் பழமையான லட்சுமி மில்ஸ், பிரிகாட் லிமிடெட், கே.பி.ஆர். மில்ஸ், ஸ்ரீ ராமநாராயணன் மில்ஸ், சுலோச்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் போன்ற பிரபல மில்கள் சிறந்த உதாரணங்களாகும்.
பம்பரம் போல பம்ப் உற்பத்தி
அதுமட்டுமில்லாமல், கோவை தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவது மோட்டார்கள் மற்றும் பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் தான். பெரிய பெரிய நிறுவனங்களையும் கடந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர பம்ப் உற்பத்தி ஆலைகள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் மூலம் தினமும் சராசரியாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலான எண்ணிக்கையில் மோட்டார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயம், வீட்டு உபயோகம், தொழில்நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு, பிரஷர் பூஸ்டர் பம்புகள் என்று அதிகபட்சமாக 70 ஹெச்பி வரையிலான மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம், 40 கோடி ரூபாய் முதல் 50 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மோட்டர்கள் மற்றும் பம்புகளின் எண்ணிக்கையில் சரிபாதி அளவுக்கு கோவையில்தான் உற்பத்தியாகின்றன. இதன் காரணமாகவே, கோவைக்கு பம்ப் சிட்டி என்ற பெயரும் உண்டு. மோட்டார் துறையில் சி.ஆர்.ஐ., டெக்ஸ்மோ, சுகுணா, டெக்கான் போன்ற முன்னணி நிறுவனங்கள் கோவைக்கு பெருமை சேர்க்கின்றன.
ஆட்டோமொபைல்
அதேபோல, ஆட்டோமொபைல் உற்பத்தியிலும் கோவை பிற நகரங்களுக்கு சவால் விடும் வகையில் திகழ்ந்து வருகிறது. இருசக்கரம், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்களும் கோவையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்ஜின் பியரிங்ஸ், பிரேக் ஷூ, ஸ்பாராக்கெட், பம்ப் காஸ்ட்டிங், வால்வ் காஸ்டிங், இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், பெல்ட்ஸ், சிலிண்டர் ஹெட், திரஸ்ட் வாசர், வாசர் அசம்பளி, கியர் பாக்ஸ், செயின் கைட், போன்ற வாகனங்களுக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள், இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பில் பிரிகால், ரூட்ஸ், எல்.ஜி.பி., ஸ்ரீ ரங்கநாதர் இன்டஸ்ட்ரீஸ், ரைடான் ஆட்டோ போன்ற முன்னணி நிறுவனங்கள் கோவைக்கு பெருமை சேர்க்கின்றன.
புதிய ஒப்பந்தம்
இன்ஜினியரிங், கட்டுமானம், உற்பத்தி போன்றவற்றில் முன்னணியாக திகழும் பன்னாட்டு நிறுவனமான எல்அன்ட்டி, மத்திய அரசின் பாதுகாப்புத்துறையில் ராணுவ தளவாட உற்பத்தியிலும் பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், தற்போது தமிழக அரசுடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. கடந்த ஜூன் 4ம் தேதி சுமார் 18 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்மூலம், கோவையில் புதிய மின்னணு பொருட்கள் உற்பத்தி திட்டம் தொடங்க உள்ளது. இதன் வாயிலாக நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பை பெற உள்ளனர்.
ஐடி நிறுவனங்கள்
இதுஒருபுறம் இருக்க கோவையின் வளர்ச்சியில் ஐடி நிறுவனங்களும் முக்கிய பங்காற்றி வருகின்றன. சிறந்த தொழில்வளம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் ஐடி நிறுவனங்களுக்கு கோவை ஒரு சிறந்த தேர்வாக இருக்கிறது. கிளவுட் கம்ப்யூட்டிங் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான சேவைகளை வழங்கும்
ஏராளமான சாப்ட்வேர் நிறுவனங்களுடன், கோவை சிறந்த ஐடி நிறுவனங்களுக்கு தாயகமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் இங்கு அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
இந்திய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் கோவை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன. டிசிஎஸ், காக்னிசென்ட், ராபர்ட் போஷ், அக்சென்ச்சர், விப்ரோ, ஐபிஎம், டெக் மஹிந்திரா மற்றும் இன்போசிஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் முதல் சிறு ஐடி நிறுவனங்களும் கோவையின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.
எண்ணிக்கை அதிகரிப்பு
கோவையில் கடந்த 2020ம் ஆண்டு வெறும் 274 ஆக இருந்த ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை தற்போது 2000 ஆக அதிகரித்துள்ளது. தேவையான அடிப்படை வசதிகளும், தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி தந்தது தான் தொழில் நிறுவனங்கள் மேம்பட்டு வருகின்றன.
கோவையின் இதயமாக இருக்கும் தொழில் நிறுவனங்களும், மில்களும், ஐடி கம்பெனிகளும் வெற்றிகரமாக இயங்குவதற்கு முக்கிய காரணியாக இருந்தது கோவைக்கு கிடைத்த வற்றாத குடிநீரும், தடையில்லா மின்சாரமும் தான். அதுமட்டுமில்லாமல், மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற சவால்களை சந்தித்தாலும், கோவை தொழில்முனைவோரிடம் இருந்த தன்னம்பிக்கையும், தைரியமும் தான் கோவையை இந்த நிலையை அடையச் செய்தது.
சந்தேகமே இல்லை
தமிழகத்தில் அமையும் ஒவ்வொரு அரசும் முன்பை விட முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. அதிமுக, திமுக அரசுகளைத் தொடர்ந்து தற்போது அமைந்துள்ள தவெக அரசும், முதலீடுகளை ஈர்ப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. இதன்மூலம், எந்த அரசு அமைந்தாலும், கோவையையும், தொழில் நிறுவனங்களையும் பிரிக்க முடியாது என்பது தெள்ளத்தெளிவாகிறது.




