கோவை: வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் விபத்து நேரங்களில் உடனடி உதவி வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரிலும், போக்குவரத்து துணை ஆணையர் மகேஸ்வரன் மற்றும் உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலிலும், பி5 வடவள்ளி போக்குவரத்து காவல்துறை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வடவள்ளி ரவுண்டானா அருகே ஏற்பாடு செய்தது.
இந்த முகாமிற்கு வடவள்ளி போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி மற்றும் உதவி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை அமர வைத்து, தலைக்கவசம் உயிரைக் காக்கும் முக்கிய பாதுகாப்பு உபகரணம் என்பதையும், சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் காவல்துறையினர் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும், சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல்கட்ட உதவிகளை எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு முகாமில் தனியார் கல்லூரி மாணவர்கள், ‘உயிர்’ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இணைந்தனர்.





