கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்த கூலியை கேட்டதால் ஆத்திரம் அடைந்து பெட் ஷாப் உரிமையாளரை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார்.
இவரது கடையில், சங்கனூர் கணேசன் வீதியைச் சேர்ந்த அருண்குமார் (38) என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது மீன் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காகக் கொடுத்து உள்ளார். பணிகளைச் செய்து முடித்த பிறகும் அருண்குமார் மீன் தொட்டியை வாங்கிச் செல்லாததால், ராஜ்குமார் அவரைத் தொடர்பு கொண்டு கடைக்கு வந்து மீன் தொட்டியைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறி உள்ளார்.
இதை அடுத்து கடைக்கு வந்த அருண்குமாரிடம், சுத்தம் செய்ததற்கான கட்டணம் ரூ.2,000-ஐ ராஜ்குமார் கேட்டு உள்ளார். ஆனால், அருண்குமார் அந்தப் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அருண்குமார், ராஜ்குமாரைத் தகாத வார்த்தைகளால் பேசி, தன் கைகளாலும் மறைத்து வைத்து இருந்த கத்தியாலும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதில் ராஜ்குமாரின் இடது மணிக்கட்டில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜ்குமாரை, அருண்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.





