கோவை: துணிக்கடையில் துணிகளை வாங்கிவிட்டு, பணம் செலுத்தியதாக போலியான GPay ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி ரூ.2,150 மோசடி செய்து தப்பிய வாலிபரின் CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரஷீத். இவர் மதுக்கரை காமராஜர் நகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6-ம் தேதி மாலை சுமார் 6.30 மணியளவில் ரஷீத்தின் மனைவி கடையில் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார்.
அப்போது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், ரூ.650 மதிப்பிலான துணிகளைத் தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து, அவசரமாக ரொக்கப் பணம் தேவைப்படுவதாகக் கூறி ரூ.1,500 பணத்தையும் கடையிலிருந்து பெற்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, துணிகளின் விலை மற்றும் பெற்ற ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.2,150 தொகையை கடையில் இருந்த QR கோடு மூலம் GPay செய்துவிட்டதாகக் கூறி, தனது செல்போனில் பணம் செலுத்தியதற்கான ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்துள்ளார்.
வாலிபர் அங்கிருந்து சென்ற பின்னர், ரஷீத்தின் மனைவி GPay கணக்கைச் சரிபார்த்தபோது, ரூ.2,150 வரவு வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
video
கடைக்கு வந்த ரஷீத், அங்கிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், வாலிபர் துணிப் பார்சலை எடுத்துக்கொண்டு கடையில் இருந்து அவசரமாக வெளியேறுவதும், சிறிது தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரஷீத், CCTV காட்சிகளுடன் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலி பணப்பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட்களை காட்டி இதுபோன்ற மோசடிகள் நடைபெற வாய்ப்புள்ளதால், பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே பொருட்களை வழங்க வேண்டும் என வணிகர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், CCTV காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





