கோவை: வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம்.
தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 11) முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
தென்மேற்குப் பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கேரளா மாநிலத்திலும், அதை ஒட்டி உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாகக் கோவை குற்றால அருவியில் திடீரெனப் பெருவெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 29.07.2026 அன்று வனத்துறை சார்பில் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலத்திற்குச் சுற்றுலாப் பயணிகள் வரக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது மலைப் பகுதிகளில் மழைப்பொழிவு தணிந்து, அருவியில் தண்ணீர் வரத்து படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த வனத்துறையினர், இன்று முதல் கோவை குற்றாலம் அருவி மீண்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகத் திறக்கப்படுகிறது எனத் தெரிவித்து உள்ளனர்.




