கோவை: அஞ்சல் தலைகள் அஞ்சல் கடிதங்களை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே கோவையில் பிரத்தியேக கண்காட்சி துவங்கியுள்ளது.
கோவை மாநகர் பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் “தி ஃபிலாட்டலிஸ்டஸ் கோயமுத்தூர்- (The Philatelists Coimbatore)” அமைப்பு சார்பில் அஞ்சல் தலை, அஞ்சல் கடிதங்கள் கண்காட்சி துவங்கி நடைபெறுகிறது.

இன்று முதல் மூன்று நாட்கள் காலை 9 மணி முதல் 5 மணி வரை இந்த கண்காட்சியானது நடைபெறுகிறது. இக்கண்காட்சியை நேஷனல் மாடல் பள்ளியில் தாளாளர் மோகன் துவக்கி வைத்தார்.
இக்கண்காட்சியில் இந்த அமைப்பைச் சேர்ந்த அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் அவர்கள் சேகரித்த அஞ்சல் தலைகள், அஞ்சல் கடிதங்களை விவரங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். பல்வேறு நாடுகளில் சேகரிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட அஞ்சல் தலைகள் அஞ்சல் கடிதங்கள் ஆகியவை அவற்றின் விவரங்கள் வரலாற்று குறிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசத்தலைவர்கள், விளையாட்டு துறை, வனவிலங்குகள், பறவைகள், மோட்டார் வாகனதுறை, இந்திய நாட்டை பறைசாற்றும் அஞ்சல் தலைகள், கார்டூன், கலைத்துறையை சேர்ந்தவர்கள், என ஏராளானமான தீம்களில் அஞ்சல்தலைகள், இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




