கோவை: கோவையில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 ஆம் ஆண்டு ஜூன் காலாண்டிற்கான வங்கிகளின் மாவட்ட ஆலோசனைக் குழு (District Consultative Committee) கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் DCC குழுத் தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், RBI உதவி பொது மேலாளர் நிருத்தன் பேரரசு. NABARD மாவட்ட வளர்ச்சி மேலாளர் முகமது ஹுசைன், மகளிர் திட்ட இயக்குநர் தமிழரசி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா உட்பட அரசுத் துறை அலுவலர்கள். வங்கிகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிக் கடன் முக்கிய ஆதாரமாக விளங்குவதால், முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கலை மேலும் அதிகரிக்கவும். வேளாண்மை மற்றும் குறுசிறு தொழில் வளர்ச்சி துறைகளுக்கான கடன் ஓட்டத்தை வலுப்படுத்தவும், தகுதியான பயனாளிகளுக்கு அரசு கடன் திட்டங்களின் பலன்களை விரைந்து சென்றடையச் செய்யவும் வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வங்கிகள், அரசுத் துறைகள் மற்றும் வளர்ச்சி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் உள்ளடக்கிய நிதி வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தி, மாவட்டத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு கடன் துறையின் பங்களிப்பை அதிகரிப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
2026-27 ஆம் ஆண்டிற்கான முன்னுரிமைத் துறை ஆண்டு கடன் இலக்கு ரூ.83.17647 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30.06.2026 வரை ரூ.32,162.82 கோடி கடன் வழங்கப்பட்டு மொத்த இலக்கில் 38.67% எட்டப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மைத் துறையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 17.20% ஆண்டு வளர்ச்சி பதிவாகியுள்ளது. குறு, சிறு தொழில் கடன் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க 24.06% ஆண்டு வளர்ச்சி பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
முன்னதாக, கோயம்புத்தூர் மாவட்டத்தின் 2026-27 ஆம் ஆண்டிற்கான Annual Credit Plan(ACPமற்றும் முன்னுரிமைத் துறை கடன் செயல்பாடுகள் குறித்த விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்டத்தின் முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் இலக்கு, வங்கிகளின் கடன் வளர்ச்சி, வேளாண்மை மற்றும் MSME துறைகளுக்கான கடன் ஓட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.





