கோவை: கோவை அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் அருகே பகல் நேரத்திலேயே கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதிகளில் பொதுமக்கள், நோயாளிகள் நலன் கருதி செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகள் இல்லாததைப் பயன்படுத்தி, அப்பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக பகல் நேரத்திலேயே மதுபாட்டில்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ரயில் நிலையம் வழியாகச் செல்லும் மதுப்பிரியர்கள் இவரிடம் மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
VIDEO
இதுதொடர்பான காட்சிகளை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படும் காட்சிகளும், சிலர் அவற்றை வாங்கிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் போன்ற முக்கியமான பொதுமக்கள் கூடும் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





