கோவை: பார்த்தீனியம் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு முகாம் துவங்கி உள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் மேலாண்மை இயக்ககத்தின், உழவியல் துறையின் கீழ் செயல்படும் அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம்- களை மேலாண்மை பிரிவின் மூலம்ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16 முதல் 22 வரை ‘பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம்’ நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சிக்கு ஜபல்பூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் களை ஆராய்ச்சி இயக்குநரகம் நிதியுதவி அளிக்கிறது. இதற்கிணங்க, விவசாயிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பண்ணை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே பார்த்தீனியத்தின் தீய விளைவுகள் மற்றும் அதன் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் மூலம் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளன. அப்போது அவர்களுக்குப் பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பண்ணைப் பணியாளர்களுக்கான பார்த்தீனியம் குறித்த விழிப்புணர்வு முகாம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கிழக்கு பண்ணையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைப் பயிர் மேலாண்மைத் துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ராஜ்குமார் தொடங்கி வைத்துத் தலைமை தாங்கினார்.
அவர் பார்த்தீனியம் மேலாண்மையின் முக்கியத்துவத்தையும், அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் வலியுறுத்திக் கூறினார். உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் கிருஷ்ணன், ஒருங்கிணைந்த பார்த்தீனியம் களை மேலாண்மை குறித்துச் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் போது, பார்த்தீனியம் பரவும் விதம், மனிதர்கள் மற்றும் கால்நடைகள் மீது அது ஏற்படுத்தும் பாதிப்புகள், அதனால் ஏற்படும் மகசூல் இழப்பு மற்றும் ஒருங்கிணைந்த பார்த்தீனியம் மேலாண்மை முறைகள் குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், பண்ணைப் பணியாளர்களுக்குப் பார்த்தீனியத்தைக் கொண்டு மட்கிய உரம் தயாரிக்கும் தொழில்நுட்பமும் செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் பேராசிரியர் மற்றும் களை மேலாண்மை பிரிவின் முதன்மை விஞ்ஞானி முனைவர் ராதாமணி, மண் அறிவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் ரேணுகாதேவி, பண்ணைப் பேராசிரியர், பண்ணை மேலாளர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் இத்திட்டத்தில் பணியாற்றும் முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நடத்தினர்.
பல்வேறு இடங்களில், பல்வேறு தரப்பினருக்காக ஆகஸ்ட் 22 வரை இத்தகைய விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படவுள்ளன.





