கோவை: வால்பாறையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறை மிகவும் குறுகிய வளைவுகள் கொண்ட சாலைகளாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 19 சுற்றுலா பயணிகள் தனியார் சுற்றுலா வேனில் வால்பாறை சென்று விட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கி திரும்பிய பொழுது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது இதில் சுற்றுலா வேனில் பயணம் செய்த 19 பேரில் குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து உடனடியாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறை மிகவும் குறுகிய வளைவுகள் கொண்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனே வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.




