கோவை: கோவை மாநகராட்சியில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை திட்டம் தீவிரமாகவும் தொடர் நடவடிக்கையாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோயம்புத்தூர் மாநகராட்சியில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அவற்றின் நலனை உறுதி செய்யவும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (ANIMAL BIRTH CONTROL – ABC) திட்டம் தீவிரமாகவும்தொடர் நடவடிக்கையாகவும் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் மதிப்பிடப்பட்டுள்ள மொத்தம் 1,11,074 நாய்களில், இதுவரை சுமார் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 68,774 நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டு, முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது மாநகராட்சியுடன் இணைந்து 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழுநேரமாக செயல்பட்டு, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், தற்போதைய நிலையில் மாதத்திற்கு சுமார் 1400 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்துஇந்த மாதத்திலேயே மாதத்திற்கு 2000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இலக்கை அடைய மாநகராட்சி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், தெருநாய்களின் எண்ணிக்கையை அறிவியல் பூர்வமாகவும், மனிதாபிமான முறையிலும் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்கள் மற்றும் சமூக நாய்களின் நலனை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





