கோவை-சத்தி சாலை மேம்பாலத்திற்கு முழுக்கா? தினசரி நெரிசல் தெரியலையா?

கோவை: சத்தி சாலை மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர். தொடரும் விபத்துகளும், மக்கள் படும் சிரமமும் அரசுக்கு தெரியவில்லையா என்று பொதுமக்கள் விரக்தியுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Advertisement

கோவையில் உள்ள முக்கிய சாலைகளுள் ஒன்றாக சத்தி சாலை உள்ளது. காவல்துறை தரவுகளின்படி, அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகளில் ஒன்றாகவும் இந்த சாலை உள்ளது.

கணபதி பகுதியிலும், சரவணம்பட்டி சந்திப்பிலும் கடந்த பல ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த இரண்டு பகுதிகளிலுமே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

கணபதி, சரவணம்பட்டியை காலை, மாலை என இரு நேரங்களிலும் கடந்து வரும் பொதுமக்கள் இது தொடர்பாக புலம்பி… புலம்பி… நெரிசலோடே வாழப்பழகும் நிலையும் ஏற்பட்டது.

Advertisement

கடந்த 10 ஆண்டுகளில் சத்தி சாலையை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான IT நிறுவனங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், கல்லூரிகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என மக்கள் நெருக்கம் அதிகரித்துள்ளது.

சத்தி ரோடு என்பது வெறும் குடியிருப்பு பகுதியை இணைக்கும் சாலை மட்டுமல்ல. வடக்கு கோவையிலிருந்து நகரின் மையப்பகுதி, தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இது மாறியுள்ளது.

Advertisement

இதனால் ஒரே சாலையில் பலவிதமான போக்குவரத்துகள் ஒன்றாகச் சந்திக்கின்றன. தனியார் கார்கள், இருசக்கர வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி வாகனங்கள், கேப்கள், ஆட்டோக்கள், சரக்கு வாகனங்கள் என வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சரவணம்பட்டி பகுதியில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட IT வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

கோவையின் ஹாட் ஸ்பாட்டாக மாறி வரும் இந்த சத்தி சாலையை இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களுக்கு வேதனையையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சரவணம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவினர் ரூ.80.48 கோடியில் நான்கு வழி மேம்பாலம் கட்டத் திட்டமிட்டனர். அம்மன் கோவிலில் இருந்து சரவணம்பட்டி வரை 1.4 கி.மீ நீளத்திற்கு, 7.5 மீட்டர் அகலத்தில் அமையவிருந்த இந்த மேம்பாலத்தில் 31 தூண்கள் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோவை மெட்ரோ அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியதால், மேம்பாலம் அமைக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கோவை மெட்ரோ ரயிலுக்கு ஒப்புதல் கூட கிடைக்கவில்லை.

இதேபோல் கணபதி பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது. அப்பகுதி குறுகலான சாலையாக இருப்பதால் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மெட்ரோ திட்டம் வரும்போது கூடுதல் நிலம் தேவைப்படும் என்பதால் கூடுதலாக நிலத்தை கையகப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பணிகள் இப்போது என்ன ஆனது என்பது அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

சமீப காலத்தில் சத்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் பல மடங்கு அதிகரித்து, தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வந்த நிலையில், சாலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு, சாலை சற்றே அகலப்படுத்தப்பட்டது.

ஆனால், யானைப் பசிக்கு, சோளப்பொரி என்பது போலவே சாலையை அகலப்படுத்தும் முயற்சிகள் அமைந்துள்ளன என்பது அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

ஏற்கனவே இந்த சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், முக்கிய சந்திப்புகளில் யுடர்ன் கொண்டு வந்திருப்பது, வாகன ஓட்டிகளின் சிரமத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

கோவைக்கு புதிதாக வருபவர்கள் இந்த சாலை மார்க்கமாக பயணிக்கும் போது, எங்கெல்லாம் யுடர்ன் வருகிறது என்பது தெரியாமல் இடதுபுறமாக சென்றுவிடுகின்றனர். யுடர்ன் வரும் போது திடீரென அவர்கள் வலதுபுறம் நோக்கி வாகனத்தைச் செலுத்தும் போது, பல்வேறு விபத்துகளும் ஏற்படுகின்றன. மேலும், இந்த குறுகிய சாலையில் பேருந்துகளும், லாரிகளும் திரும்பி மறு சாலைக்குச் செல்வதற்குள் டிரைவர்களும், மற்ற வாகன ஓட்டிகளும் நொந்துபோய் விடுகின்றனர்.

ஒருபுறம் தொழிற்துறை வளர்ச்சி, மறுபுறம் IT sector வளர்ச்சி; அதனுடன் குடியிருப்பு விரிவாக்கம், மக்கள் தொகை அதிகரிப்பு, வாகன பயன்பாடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளர்ச்சி என அனைத்தும் ஒரே நேரத்தில் அதிகரிக்கும்போது, அதன் அழுத்தம் முதலில் தெரியும் இடம் சாலைகள்தான். சத்தி ரோடு அதற்கு ஒரு முக்கிய உதாரணமாக உள்ளது.

கோவை மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் கூட கிடைக்கப்பெறாத நிலையில், அத்திட்டம் வரும் வரை இந்த போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கி சீரழிய வேண்டுமா? வரப்போகும் மெட்ரோ திட்டத்திற்கு ஏற்ப மேம்பாலங்களை திட்டமிட்டு அமைத்தால் எங்களுக்கு நிம்மதியும் பாதுகாப்பும் கிடைக்குமே என்று ஏங்குகின்றனர் பொதுமக்கள்…

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது- கோவையில் ஃபைஜி தெரிவிப்பு…

கோவை: பாஜகவை தோற்கடிக்கும் பொறுப்பில் SDPI உள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஃபைஜி தெரிவித்துள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் SPDI கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில்...

Video

தடாகம் மக்களே கவனமா இருங்க… ஷட்டரை தட்டிய யானை… வீடியோ உள்ளே…

கோவை: கோவை தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிப் பார்த்துச் சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொகுதிகள் ஆன தடாகம்...