கோவை: கோவையில் டாஸ்மாக்கில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சூலூர் அடுத்த
காரணம்பேட்டை பகுதியில் வசித்து வந்த தேவதாஸ் என்பவருக்கும், ரஞ்சித் என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கருமத்தம்பட்டி ராமாட்சியம்பாளையம் டாஸ்மாக் கடையில் மது வாங்குவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஒரு மாதம் கழித்து, இன்று மாலை தேவதாஸ் அதே டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது ரஞ்சித்தும் அவரது நண்பரும் தேவதாஸைப் பார்த்துள்ளனர்.
பின்னர் தேவதாஸ் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள நொய்யல் ஆற்றுப் பகுதிக்கு நடந்து சென்றபோது, ரஞ்சித்தும் அவரது நண்பரும் பின்தொடர்ந்து சென்று கடந்த மாதம் எங்களிடம் ஏன் தகராறு செய்தாய்? எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரஞ்சித், தான் வைத்திருந்த கத்தியால் தேவதாஸின் இடது மற்றும் வலது மார்புப் பகுதியில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தேவதாஸ், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் தேவதாஸின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த ரஞ்சித் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Also Read: குலைநடுங்க வைக்கும் கோவை: இந்த மாதத்தில் 7 கொலைகள்… இன்று மட்டும் 3…!
டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





