கோவை: ஆனைக்கட்டி மலைப்பகுதியில் அனுமதியின்றி இயங்கும் 8 தனியார் விடுதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 24 வீரபாண்டி மற்றும் 22 நஞ்சுண்டாபுரம் ஊராட்சிப் பகுதிகளில் அரசு அனுமதியின்றி இயங்கி வரும் 8 தனியார் ரிசார்டுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நிலை அறிக்கையை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அரசு வழக்குரைஞர் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட வன அலுவலர், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கோவை வடக்கு வட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டு ஆனைக்கட்டி பகுதியில் உள்ள தனியார் விடுதிகளில் விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது உணவுப் பாதுகாப்பு உரிமம், வணிக உரிமம், மதுபான விற்பனை உரிமம், தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, வனத்துறை அனுமதி, கட்டிட வரைபட அனுமதி மற்றும் வருவாய்த்துறை சான்றுகள் உள்ளிட்டவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
இந்த ஆய்வில், 24 வீரபாண்டி ஊராட்சியில் உள்ள ‘மை வில்லேஜ் ஈக்கோ டூரிஸ்ட் ரிசார்ட்’ மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் உள்ள ‘டார்சா ரிசார்ட்ஸ்’ ஆகிய இரண்டு விடுதிகள் மட்டுமே நகர் ஊரமைப்பு இயக்ககம் (டி.டி.சி.பி) மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் முறையான அனுமதியைப் பெற்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
அதேநேரம், வீரபாண்டி ஊராட்சிப் பகுதியில் செயல்படும் எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட், கார்னிச் இன், டால்பின்ஸ் ரிசார்ட்ஸ் & உணவகம், கே.கே. செல்ஃபி பாயிண்ட், பாம் ரிட்ரீட், ஃபயர் ஃப்ளை ரிசார்ட், பாரத் ஹாலிடேஸ் ரிசார்ட், ஜிமேக்ஸ் ரிசார்ட் & உணவகம் ஆகிய 8 தனியார் விடுதிகள், அரசுத் துறைகளிடம் முறையான அனுமதிகள் பெற்றதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட 8 விடுதிகளின் நிர்வாகத்தினரும் அரசுத் துறைகளிடம் பெற்ற அனுமதி ஆவணங்களை உடனடியாக வட்டாட்சியர் அலுவலகம் அல்லது ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், கொண்டனூர் பகுதியில் சரண்யா மற்றும் வெங்கடேஷ் என்பவர்களால் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒரு விடுதிக்கும் அனுமதி ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் விடுக்கப்பட்டு, அதுகுறித்த விவரங்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





