கோவை: தமிழகத்தில் சைபர் மோசடி குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நிதி இழப்பில் தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. கோவையில் மட்டும் நடப்பு ஆண்டில் இதுவரை சுமார் 6,000 புகார்கள் பதிவாகியுள்ளன.
கோவை மாவட்டத்தில் சமீப காலமாக சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மற்றும் மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் தினமும் ஏராளமான புகார்கள் பதிவாகி வருகின்றன.
குறிப்பாக முதியோர், ஓய்வுபெற்றவர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து மோசடி கும்பல்கள் பல்வேறு வகையான சைபர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தில் உள்ளது. இதில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும், மகாராஷ்டிரா 3-வது இடத்திலும் உள்ளன.
அதே நேரத்தில், சைபர் மோசடிகளால் பொதுமக்கள் சந்திக்கும் நிதி இழப்பின் அடிப்படையில் தமிழகம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா 2-வது இடத்திலும், உத்தரபிரதேசம் 3-வது இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சைபர் மோசடி தொடர்பாக மொத்தம் 88,355 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கோவையில் மட்டும் சுமார் 6,000 புகார்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் அதிகரித்து வரும் சைபர் மோசடிகளை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும் தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





