கோவை: கோவை ஆனைக்கட்டி பகுதியில் உரிய அனுமதி மற்றும் அரசு துறைகளின் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத 8 தனியார் ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளில் அனுமதியின்றி தனியார் ரிசார்ட்டுகள் செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமையில் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ஆனைக்கட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் ரிசார்ட்டுகளில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
என்னென்ன ஆவணங்கள் ஆய்வு?
ஆய்வின்போது ரிசார்ட்டுகளிடம் உணவு பாதுகாப்பு சான்றிதழ், வர்த்தக உரிமம், மதுபான விற்பனை உரிமம், மின்சாரத்துறையின் தடையில்லா சான்று, வனத்துறை அனுமதி, கட்டிட உரிமம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும், ரிசார்ட்டுகளை நடத்துவதற்காக பிற அரசு துறைகளிடம் பெறப்பட்ட அனுமதி மற்றும் சான்றிதழ்களின் நகல்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் நோட்டீஸ்
இதுதொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியிருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையான அனுமதி ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் முழுமையாக சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து ஆவணங்களை சமர்ப்பிக்காத 8 தனியார் ரிசார்ட்டுகளுக்கு மாவட்ட நிர்வாகம் தற்போது மீண்டும் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
தொடர்ந்து உரிய அனுமதி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





