கோவை : கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த உணவகத்தை மீண்டும் திறக்கும்போது, சமையலறைக்குள் மறைந்திருந்த அரிய வகை பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் சாலை – நேதாஜி நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்று நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உணவகத்தை மீண்டும் திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்து தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, போதிய வெளிச்சம் இல்லாத சமையலறைக்குள் பாம்பு ஒன்று மறைந்திருப்பதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு (Wildlife & Nature Conservation Trust – WNCT) தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்த WNCT மீட்புக் குழுவினர் மோகன் மற்றும் மோனா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், சமையலறைக்குள் மறைந்திருந்த பாம்பை ஊழியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் சாதுரியமாக பிடித்து பத்திரமாக மீட்டனர்.
வெள்ளிக்கோள்வரையன்
மீட்கப்பட்ட பாம்பு ‘வெள்ளிக்கோள்வரையன்’ (Common Wolf Snake) வகையைச் சேர்ந்தது என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த வகை பாம்புகள் உடலமைப்பில் ஆபத்தான கட்டுவிரியன் பாம்புகளைப் போன்று வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்பட்டாலும், இவை முற்றிலும் நஞ்சற்றவை. மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத சாதுவான பாம்புகளாகும். வீடுகளில் காணப்படும் பூச்சிகள் மற்றும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் இயல்புடையவை என தெரிவித்தனர்.
மேலும், நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்கும்போது போதிய வெளிச்சத்துடன் மிகுந்த கவனத்துடன் சென்று சுத்தம் செய்ய வேண்டும் என WNCT அமைப்பினர் அறிவுறுத்தினர்.
பாம்புகள் தென்பட்டால் அவற்றை அடித்துக் கொல்லாமல், உரிய வன உயிரின மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்து பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.





