கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை விவசாயிகள் வெளி வியாபாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்காநல்லூர் உழவர் சந்தை விவசாயிகள் வெளி வியாபாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. சிங்காநல்லூர் சுற்று வட்டார மக்கள் பலரும் இங்கு காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அது மட்டுமின்றி உழவர் சந்தைக்கு வெளியில் பல்வேறு வெளி காய்கறி வியாபாரிகளும் இங்கு வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெளி வியாபாரிகளால் உழவர் சந்தைக்கு உள்ளே இருக்கும் விவசாயிகள் தங்களுக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி இன்றும் விவசாயிகள் உழவர் சந்தை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியில் கடை போடும் வியாபாரிகள் உரிய அனுமதி இன்றி கடைகளை போடுவதாகவும் இதனால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறும் அவர்கள் அதே சமயம் கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே கோவையில் உள்ள உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
பின்னர் அங்கு வந்த வந்த அதிகாரிகள் சில வியாபாரிகளின் வெளி வியாபாரிகள் கடைகளை அப்புறப்படுத்தினர். ஆனால் சில கடைகளை மட்டுமே அதிகாரிகள் அப்புறப்படுத்தியதாக கூறி உழவர் சந்தை விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி செயல்படும் எந்த கடையையும் அனுமதிக்க கூடாது என்றும் உரிய அனுமதி பெற்று வியாபாரம் செய்ய வந்தால் நாங்களே அவர்களே அனுமதிப்பதாகவும் உழவர் சந்தை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.





