கோவை: உக்கடம் பேருந்து நிலையத்தில் வாட்ஸ்-அப் மூலம் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி எண்களை அனுப்பி ஆன்லைனில் பணம் வசூலித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவை உக்கடம் போலீசார் நேற்று மாலை உக்கடம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறை அருகே வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளின் 3 எண்களை வாட்ஸ்-அப் குழுக்களில் அனுப்பி, பொதுமக்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் பணம் வசூலித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை உக்கடம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் உக்கடம் கே.ஜி. லே-அவுட் பகுதியைச் சேர்ந்த பயாஸ்தீன் (33) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ்தீனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட பயாஸ்தீன் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.





