கோவை: பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர்களின் சம்பளத்தில் ESI அபராதத் தொகை என ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் குற்றச்சாட்டு. இதைக் கண்டித்து செப்டம்பர் 7-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் தொழிலாளர்களின் சம்பள கணக்கிலிருந்து ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணம் பிடித்தம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளரிடம் கேட்டபோது, ESI நிறுவனத்திற்கு செலுத்திய தொகை என விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ESI சட்ட விதிகளின்படி இவ்வாறு தொகை பிடித்தம் செய்வது முறையல்ல என தொழிற்சங்கம் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை ஆட்சிக்குழு கூட்டத்தில் அனுமதி பெற்று திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிவரும் மாதங்களில் இதுபோன்ற அபராதத் தொகைகள் பிடித்தம் செய்யப்படாது என்றும் பதிவாளர் உறுதியளித்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ESI சட்டத்தின்படி அனுமதிக்கப்படும் 0.75 சதவீத தொகை மட்டுமே பிடித்தம் செய்யப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டபோது, ESI அபராதத் தொகை என்ற பெயரில் மீண்டும் ரூ.500 பிடித்தம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ESI துணை இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தொழிலாளர்களிடம் இதுபோன்று பணம் பிடித்தம் செய்வது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என அவர்கள் தெரிவித்ததாகவும் சங்கத்தினர் கூறுகின்றனர்.
மேலும், தொடர்ந்து இதுபோன்று பிடித்தம் செய்யப்பட்டால் உரிய அனுமதி பெற்று ஆய்வு நடத்தி, தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ESI அதிகாரிகள் எச்சரித்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பல்கலைக்கழக நிதி அலுவலகத்தில் பணியாற்றும் மோகன்ராஜ் என்பவர், தொழிலாளர்களிடம் ரூ.500 பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்ததாகவும், இதற்கு பதிவாளரும் ஒப்புதல் அளித்ததாகவும் தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதனை கண்டித்து, வரும் 7-ம் தேதி பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தவும், தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் தொழிலாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சங்க பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், சங்கத் தலைவர் சிந்தாமணி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





