கோவை: கோவை பீளமேட்டில் மதுபான கூடத்தில் இருதரப்பினர் மோதிய சம்பவத்தை தொடர்ந்து, விதிமீறல் புகாரின் அடிப்படையில் FL.2 மதுபான கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை, பீளமேட்டை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் “வருகை மனமகிழ் மன்றம் ஆவங்குடி” என்ற பெயரில் FL.2 மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபான கூடத்தில் நேற்றிரவு மது அருந்த வந்த இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், இருதரப்பினரும் மதுபான கூடத்திற்குள் இருந்த சேர்களை தூக்கி மாறி மாறி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சாலையிலும் இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மதுபான கூடம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கு ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து, மதுபான கூடத்தை மூட வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக மதுபான கூடத்தின் மேலாளர் நாகசுப்பிரமணியம் அளித்த புகாரின் அடிப்படையில், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மதுபான கூடத்தில் உறுப்பினர்களாக இல்லாத நபர்களுக்கும் மது விற்பனை செய்ததாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் Public Nuisance உருவாக்கியதாகவும் புகார் எழுந்தது.
இந்த விதிமீறல் புகாரின் அடிப்படையில், கோவை மதுவிலக்குத் துறை வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் இன்று சம்பந்தப்பட்ட FL.2 மதுபான கூடத்திற்கு சீல் வைத்தனர்.
கோவை பீளமேட்டில் மதுபான கூடத்தில் இருதரப்பினர் மோதிய சம்பவத்தை தொடர்ந்து, விதிமீறல் புகாரின் அடிப்படையில் FL.2 மதுபான கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.





