கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகையை சேதப்படுத்தி அரிசியை தின்று சேதப்படுத்தியது, தொழிலாளர்கள் அலரியடித்து அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்குள் புகுந்து உயிர் தப்பினர்.
மேலும் அருகில் இருந்த தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களையும் சேதப்படுத்திய ஒற்றை யானையை வனத்துறையினர் 2 மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர்.
கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் ஒற்றை யானை ஒன்று உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. கதிர் நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்த அந்த ஒற்றை யானை, அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களைச் சாப்பிட்ட யானை, அங்கிருந்த நாய்களையும் துரத்தியது.
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவு இரண்டு மணி அளவில் அந்த ஒற்றை யானை அங்குள்ள வடமாநில கட்டிடப் பணியாளர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகைக்குள் புகுந்தது.
கொட்டகைக்குள் இருந்த உணவுப் பொருட்களை அது சேதப்படுத்தியதால், அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு அருகில் உள்ள கட்டிடத்திற்குள் தஞ்சம் புகுந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதிக்குள் நின்றிருந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். 2 மணி நேரம் போராடி காட்டுக்குள் விரட்டினர்.
இப்பகுதியில் உள்ள மணி நகர், கணபதி நகர், கணபதி கார்டன், போஸ்டல் காலனி, ஆர்.வி.நகர், பூச்சியூர், வெற்றிவேலவா நகர், ரேணுகாபுரம், லட்சுமி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த ஒற்றை யானையின் நடமாட்டம் தினந்தோறும் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் இரவு நேரங்களில் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இரவு நேரங்களில் லட்சுமி நகர், ரேணுகாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டுக்கள் ஏற்படுவதால், யானை நடமாட்டத்தைக் கண்காணிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகி வருகின்றனர். மின்வாரியமும் வனத்துறையும் இணைந்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





