கோவை: கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக- காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக- காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிப்பிற்கு அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியவுடன் சிறந்த மாநகராட்சி விருது பெறப்பட்டது குறித்து மேயர் அறிவித்தார் . அப்போது திமுக கவுன்சிலர்கள் சிலர் மக்கள் பிரதிநிதிகளான மேயர் உள்ளிட்டோரை அழைத்துக் கொடுக்காமல் நகராட்சி நிர்வாக இயக்குனர் மட்டுமே அழைத்து கொடுத்ததற்காக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

முதல்வர் பேசுவதே இல்லை என்கின்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து முதல்வர் மக்களையும் சந்திப்பதில்லை மக்கள் பிரதிநிதிகளையும் சந்திப்பதில்லை என்று பேசினர். அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் அழகு ஜெயபால் முதல்வர் பேச வேண்டிய இடத்தில் பேசுவார் என கருத்து தெரிவித்தார். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மாநகராட்சி அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதனிடையே வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் டென்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி அரங்கிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அரங்கிற்குள்ளேயும் முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிப்பது என்பது மக்களின் பிரச்சினை என்றும் இதற்கு இதர கவுன்சிலர்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
பின்னர் அது தொடர்பாக விவாதம் மேற்கொள்ளப்பட்டு தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக மேயர் தெரிவித்தார். மேலும் விரிவான அறிக்கை இது தொடர்பாக கொடுக்க உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ரவிதேஜா கூறினார்.
பின்னர் சின்னவேடம்பட்டி ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் கோடிக்கணக்கில் பணம் பெற்று விட்டதாக பத்திரிகைகளில் வெளியான செய்திக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறினர்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பும் அதிமுக கவுன்சிலர்கள் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.





