கோவை: அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதன்படி கோவையில் ரயில் நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் இச்சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தப் போராட்டத்தில் வங்கிகளின் லாபத்தில் உரிய பங்கினை வழங்க வேண்டும், PLI உடனடியாக வழங்க வேண்டும், பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட படி ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை வங்கிகள் 2 லட்சம் கோடி லாபம் ஈட்டிய பிறகும் நிதி அமைச்சகம் கோரிக்கைகளை சிறுமைப்படுத்துவதற்கு கண்டனம், வங்கிப் பணிகளுக்கு வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது,
தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கோவையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.





