கோவை: கோவையில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் அருண்ராஜை சூழ்ந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
கோவை மாநகராட்சி விமான நிலையம் அருகில் உள்ள சௌபாக்கியா நகர் பகுதியில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் அமைச்சர் இடம் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
மேலும் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிலவேம்பு குடிநீர், மருத்துவ சேவை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
பின்னர் அங்குள்ள தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது ஒரு வீட்டிற்கு சென்று மாநகராட்சி பணிகள் குறித்து கேட்டறியும் பொழுது அவரை சூழ்ந்த அப்பகுதி மக்கள் இங்கு முறையாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் நீங்கள் வந்ததால்தான் தூய்மை பணிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்தனர்.
மேலும் இங்கு அதிகமான விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் இருக்கிறது என்று கூறிய மக்கள் அங்குள்ளவர்கள் கழிவுகளை எல்லாம் அப்படியே கொட்டி விட்டு செல்கின்றனர் என்றும் மருத்துவமனைகளும் இருப்பதால் மாஸ்க் உள்ளிட்டவற்றையும் சாலைகளிலேயே வீசி செல்வதாக கூறினர்.

மேலும் இப்பகுதியில் தெருநாய் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் கூறினர். தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் வந்து பணிகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்த அமைச்சர் அருண்ராஜ் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதே சமயம் பொதுமக்கள் நீங்களும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு குப்பைகளை வகை பிரித்து தர வேண்டும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.





