கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்
மீண்டும் வலம் வந்த வேட்டையன்
காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி, மரங்களை தின்று சேதப்படுத்தியது. பின்னர் தகவல் அறிந்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டி உள்ளனர்.
கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான ஆனைகட்டி மலைப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளன. காட்டுயானைகள் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுகிறது.
இந்த நிலையில் கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவு வேட்டையன் என்ற காட்டு யானை உணவு தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது. யானையக் கண்டதும் அங்கிருந்த நாய்கள் குரைத்தன. யானை வீட்டின் முன் வளர்க்கப்பட்டிருந்த வாழை, கொய்யா உள்ளிட்ட மரங்களை சாப்பிட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதிக்குள் நின்றிருந்த யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.




