கோவை : கோவை என்.எச். ரோடு மணிமேகலை வீதியில் உள்ள ஸ்ரீ மகாளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து சுமார் ரூ.5,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை என்.எச். ரோடு மணிமேகலை வீதியைச் சேர்ந்தவர் யோகநாத் (47). இவர் அதே பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருவதுடன், ஸ்ரீ மகாளியம்மன் கோயில் நிர்வாகப் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
கடந்த 10-ம் தேதி இரவு வழக்கம்போல் கோயிலை பூட்டிவிட்டு யோகநாத் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை 5 மணியளவில் கோயிலை திறக்க வந்தபோது, உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு தரையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, உண்டியலில் இருந்த சுமார் ரூ.5,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து யோகநாத் உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், கோயிலில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
யோகநாத் அளித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை அம்மன் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் சுமார் ரூ.5,000 பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைரேகைகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Amman temple hundi broken and cash stolen in Ukkadam, Coimbatore





