மாணவிகளை தாக்கியதாக புகார்… உணவு வழங்குவதிலும் முறைகேடு?- பாலமலை பள்ளி விவகாரம்

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியின உண்டி, உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவிகளை தாக்கியதாகவும், மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Advertisement

பாலமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு பெரும்பதி, குஞ்சூர்பதி, மாங்குளி, பசுமணி, பசுமாத்துப்புதூர், பெருக்கை, பெருக்கைப்புதூர் உள்ளிட்ட பழங்குடியின மலை கிராமங்கள் உள்ளன.

கடந்த 1954-ம் ஆண்டு வனவிலங்குகள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதி மாணவர்களின் கல்விக்காக இந்த பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் 43 பழங்குடியின மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, பால், பழங்கள், சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அட்டவணைப்படி சைவம் மற்றும் அசைவ உணவுகளும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணபிரியா மீது மாணவிகள் மற்றும் பெற்றோர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர். மாணவர்களை தாக்குவது, மாணவிகளை கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது, பள்ளியை மதிய நேரத்திலேயே முடித்து விடுவது, மாலை உணவு வழங்காதது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை ஆதார் பயோமெட்ரிக் திருத்தத்திற்காக செல்போன் கொண்டு வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதாகவும், அந்த செல்போனில் சார்ஜ் இல்லாததால் மாணவியை தாக்கியதாகவும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவியின் முகத்தில் கை விரல் தடம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

மேலும், 5-ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுத் தாளை காண்பித்தபோது, அவரை குச்சியால் தாக்கியதாகவும், இதனால் முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆசிரியர் ஒருவரையும் தலைமை ஆசிரியர் தாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெற்றோர் தரப்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு, மாணவியின் காயங்களுக்கான புகைப்படங்களும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

போலீசார் விசாரணையின்போது மாணவியை தாக்கியதை தலைமை ஆசிரியர் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் லேசாகவே அடித்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார். சில குற்றச்சாட்டுகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களால் உருவாக்கப்பட்டவை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பள்ளியில் கழிப்பறை மற்றும் சமையலறை பணியாளர்களுக்கான செலவுகளை தானே மேற்கொண்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், பள்ளியில் வழங்கப்படும் உணவு முறையாக வழங்கப்படவில்லை என்றும், மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளி மேலாண்மைக்குழு தரப்பில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியர் தினமும் காலை 10 மணிக்கு பிறகே பள்ளிக்கு வருவதாகவும், பிற்பகல் 2.30 மணியளவில் புறப்படுவதாகவும் கூறப்படுகிறது.

பள்ளி குடிநீர் தொட்டியில் தவளை இறந்து கிடந்ததாகவும், தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும் பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடற்கல்வி வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்றும், தன்னார்வ அமைப்புகள் வழங்கிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால், தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என சில பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியர்களை மாற்றக்கூடாது என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை கூறுகையில், தலைமை ஆசிரியர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். விசாரணை முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...