விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகருக்கு படைக்கப்படும் பாரம்பரியமான பிரசாதங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய மோதகம், இனிப்பு கொழுக்கட்டை, இனிப்பு பிடி கொழுக்கட்டை, ரவா லட்டு மற்றும் பொரி உருண்டை ஆகிய 5 வகை பிரசாதங்களின் செய்முறையை பார்க்கலாம்.
மோதகம்
விநாயகருக்கு மிகவும் பிடித்தமான உணவாக மோதகம் கருதப்படுகிறது. அதனால்தான் விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகள் மற்றும் கோயில்களில் மோதகம் முக்கிய நைவேத்தியமாக இடம்பெறுகிறது. வெளிப்புறத்தில் மென்மையான அரிசி மாவும், உள்ளே இனிப்பான தேங்காய் மற்றும் வெல்லப் பூரணமும் கொண்ட மோதகம், சுவையிலும் பாரம்பரியத்திலும் தனிச்சிறப்பு பெற்றது.
மோதகத்தைப் பற்றிய பல்வேறு பாரம்பரியக் கதைகள் உள்ளன. ஞானத்தின் அடையாளமாக மோதகம் கருதப்படுவதாகவும், அதன் உள்ளே இருக்கும் இனிப்பு பூரணம் ஆன்மிக அறிவின் இனிமையை குறிக்கிறது என்றும் சில நம்பிக்கைகள் கூறுகின்றன. இதனால் விநாயகரின் கையில் மோதகம் இடம்பெறும் உருவங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
நெய் – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
பூரணத்திற்கு:
தேங்காய் துருவல் – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்
முந்திரி – தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் தேங்காய் துருவல் மற்றும் வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து பூரணத்தை தயாரிக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து மாவாக பிசைய வேண்டும்.
தயாரான மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, நடுவில் பூரணத்தை வைத்து மோதக வடிவில் பிடிக்க வேண்டும். பின்னர் இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 7 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்தால் சுவையான மோதகம் தயார்.
இனிப்பு கொழுக்கட்டை
மோதகத்தைப் போலவே கொழுக்கட்டையும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளது. குறிப்பாக இனிப்பு கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை உள்ளிட்ட பல வகைகள் வீடுகளில் தயாரிக்கப்படுகின்றன.
அரிசி மாவு, வெல்லம், தேங்காய் போன்ற எளிமையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கொழுக்கட்டை, நம் பாரம்பரிய சமையலின் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து கொழுக்கட்டை தயாரிப்பது பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 3/4 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
ஏலக்காய் – 1/2 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும்.
இதனுடன் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியான மாவாக கிளற வேண்டும். மாவை சிறிது நேரம் ஆறவிட்டு, பின்னர் தேவையான வடிவில் உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.
தயாரான கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்தால் இனிப்பு கொழுக்கட்டை தயார்.
கார கொழுக்கட்டை செய்முறை
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளற வேண்டும்.
மாவு பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிட வேண்டும். பின்னர் கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேங்காய் துருவலை சேர்த்து சிறிது நேரம் கிளற வேண்டும்.
இந்த கலவையை தயாரித்து வைத்துள்ள அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் மாவை சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் அழுத்தி கொழுக்கட்டை வடிவில் பிடிக்க வேண்டும்.
தயாரான கார கொழுக்கட்டைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்தால், சுவையான கார கொழுக்கட்டை தயார்.
ரவா லட்டு
தேவையான பொருட்கள்:
ரவா – 1 கப்
சர்க்கரை – 1 1/2 முதல் 2 கப்
நெய் – தேவையான அளவு
முந்திரி – 10
ஏலக்காய் – 3 முதல் 4
பால் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ரவாவை கடாயில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் அதை சற்று நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை மற்றும் ஏலக்காயை தனியாக பொடியாக அரைத்து, அதை வறுத்த ரவாவுடன் சேர்க்க வேண்டும். அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியையும் கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் சூடான நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கலவையை நன்றாக பிசைய வேண்டும். தேவையான பதம் வந்ததும் கைகளால் உருண்டைகளாக பிடித்து லட்டு தயாரிக்கலாம்.
லட்டு பிடிக்க முடியாத அளவுக்கு கலவை உலர்ந்திருந்தால் சிறிதளவு வெதுவெதுப்பான பாலை சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அதிகமாக பால் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
பொரி உருண்டை
விநாயகர் சதுர்த்தி நாளில் பல வீடுகளில் தயாரிக்கப்படும் மற்றொரு பாரம்பரிய உணவு பொரி உருண்டை. பொரி மற்றும் வெல்லம் ஆகிய இரண்டு முக்கிய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இனிப்பு, எளிமையானதாக இருந்தாலும் சுவையில் தனி இடம் பெற்றுள்ளது.
பொரி உருண்டையை தயாரிக்கும் போது வெல்லப்பாகின் பதம் மிகவும் முக்கியமானது. சரியான பதத்தில் பாகு வந்தால்தான் உருண்டையை எளிதாக பிடிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
பொரி – 4 கப்
வெல்லம் – 1 1/2 கப்
தண்ணீர் – சிறிதளவு
ஏலக்காய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்ச வேண்டும். தேவையான பதத்தில் வெல்லப்பாகு வந்ததும் அதில் ஏலக்காய் சேர்க்க வேண்டும்.
பின்னர் பொரியை வெல்லப்பாகில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கைகளில் சிறிதளவு நெய் தடவிக்கொண்டு, கலவை சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.
இவ்வாறு தயாரிக்கப்படும் பொரி உருண்டைகளை சிறிது நேரம் ஆறவிட்டால் சுவையான பிரசாதம் தயார்.
விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த 5 வகையான பிரசாதங்களையும் வீட்டிலேயே சுலபமாக தயாரித்து விநாயகருக்கு படைத்து வழிபடலாம்.




