கோவை: கோடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில், கோவை மாநகர காவல்துறையில் “குடும்ப தொடர்பு போலீஸ் அதிகாரி” (FLPO) என்ற புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல்துறையில் பாலியல் குற்றங்கள், போக்சோ, கொலை, கடத்தல், கடுமையான தாக்குதல், சந்தேக மரணம், பெரும் சாலை விபத்து உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் காவல்துறையின் தொடர்பை எளிதாக்கும் வகையில் “குடும்ப தொடர்பு போலீஸ் அதிகாரி” (FLPO) என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், வழக்கின் விசாரணை நிலை, சட்டப்படி தெரிவிக்கக்கூடிய முக்கிய தகவல்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினருக்கு உரிய முறையில் தகவல் வழங்கப்பட உள்ளது. மேலும், அவர்களின் குறைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளையும் காவல்துறையினர் உடனுக்குடன் கவனத்தில் கொள்ள உள்ளனர்.
இதுதொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில், FLPO-க்களுக்கான சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், குடும்பத்தினரை எவ்வாறு அணுக வேண்டும், வழக்கின் தகவல்களை எவ்வாறு பகிர வேண்டும் என்பது குறித்து போலீசாருக்கு விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
புதிய நடைமுறையின்படி, FLPO நியமிக்கப்பட்டதும், பாதிக்கப்பட்டவர் அல்லது உயிரிழந்தவரின் குடும்பத்தினரை விரைவாக தொடர்புகொண்டு, காவல்துறையின் தொடர்பு அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். குடும்பத்தினர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் அவசரநிலை தொடர்பு நடைமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்படும்.
குடும்பத்தினரின் கவலைகள் மற்றும் கருத்துகளை பொறுமையாக கேட்டறிந்து, மனிதநேயத்துடனும் கண்ணியத்துடனும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை நடைமுறைகள் எளிய மொழியில் விளக்கப்படுவதுடன், தவறான உறுதிமொழிகள் அல்லது நம்பத்தகாத வாக்குறுதிகள் வழங்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் தன்மைக்கு ஏற்ப, எப்.ஐ.ஆர் பதிவு, குற்றப்பிரிவுகள், கைது, சட்டப்படி தெரிவிக்கக்கூடிய முக்கிய விசாரணை முன்னேற்றங்கள், குற்றப்பத்திரிகை அல்லது இறுதி அறிக்கை தாக்கல் உள்ளிட்ட தகவல்கள், விசாரணையின் ரகசியத்தன்மைக்கு உட்பட்டு குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படும்.
அதேபோல், குடும்பத்தினரிடம் இருந்து கிடைக்கும் புதிய தகவல்கள், சாட்சிகள், சிசிடிவி காட்சிகள், ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் இருந்தால், அவற்றை விசாரணை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்ல FLPO நடவடிக்கை மேற்கொள்வார். ஆனால், FLPO விசாரணை அதிகாரிக்கு மாற்றாக செயல்படமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் அல்லது சாட்சிகளுக்கு அச்சுறுத்தல், மிரட்டல், சமரசம் செய்ய அழுத்தம், பின்தொடர்தல் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களால் தொந்தரவு ஏற்படுகிறதா என்பதையும் FLPO அவ்வப்போது கேட்டறிவார். இதுபோன்ற புகார்கள் கிடைத்தால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவைப்படும் மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை, சட்ட உதவி, குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள், இழப்பீடு, தங்குமிடம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்ட அரசு நலச்சேவைகளை பெற்றுத்தருவதற்கான ஒருங்கிணைப்பையும் FLPO மேற்கொள்வார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் FLPO குடும்பத்தினருக்கான தொடர்பு அதிகாரியாக தொடர்ந்து செயல்படுவார். முக்கியமான நீதிமன்ற தேதிகள், ஜாமீன் நடவடிக்கைகள் மற்றும் சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நடைமுறைகள் குறித்தும் உரிய தகவல்கள் வழங்கப்படும்.
கொடுங்குற்ற வழக்குகளில் முதல் 24 மணி நேரத்திற்குள் இயன்றவரை குடும்பத்தினரை நேரடியாக தொடர்பு கொள்ளவும், முதல் 7 நாட்களில் தேவைக்கேற்ப அடிக்கடி தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் போது, வழக்கின் தன்மைக்கு ஏற்ப குறைந்தது 7 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது முக்கிய முன்னேற்றம் ஏற்படும் போதெல்லாம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணையில் தாமதம், முறையற்ற விசாரணை, தகவல் பதிவு செய்ய மறுப்பது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து அச்சுறுத்தல், சாட்சிகளுக்கு பாதுகாப்பின்மை உள்ளிட்ட புகார்கள் குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டால், அவற்றை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், கொடுங்குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வழக்கின் நிலவரத்தை தெரிந்து கொள்வதற்காக மீண்டும் மீண்டும் காவல் நிலையம் செல்ல வேண்டிய நிலையை குறைத்து, குடும்பத்தினருக்கும் காவல்துறைக்கும் இடையே மனிதநேயமான தொடர்புப் பாலமாக FLPO செயல்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை கமிஷனர்கள், அனைத்து சரக உதவி கமிஷனர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.





