கோவை : கோவை காந்திபுரம் ஆர்.வி. ரவுண்டானா அருகே ஆம்னி பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றியபோது ஏற்பட்ட தகராறில், டிரைவரை தாக்கி மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி முத்தண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்வேஸ்வரன் (36). ஆம்னி பஸ் டிரைவரான இவர், கோவையில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்சை ஓட்டி வருகிறார்.
இந்நிலையில், நேற்று காந்திபுரம் ஆர்.வி. ரவுண்டானா அருகே பஸ்சை நிறுத்தி சென்னைக்கு செல்லும் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர், அந்த இடத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விஷ்வேஸ்வரனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி விஷ்வேஸ்வரனை தாக்கியதுடன், மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து விஷ்வேஸ்வரன், காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், விஷ்வேஸ்வரனை தாக்கியதாக தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த மனோஜ்குமார் (33), செல்வபுரத்தை சேர்ந்த அசோக் (31), பூமிநாதன் (31) ஆகியோரின் பெயர்கள் தெரியவந்தன.
இதையடுத்து 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





