கோவை : கோவை இருகூர் ராவுத்தூர் பகுதியில் திருடர்கள் என சந்தேகித்து வடமாநில தொழிலாளர்கள் இருவரை கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் ராவுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவரது வீட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இவர்கள் இருகூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு தங்கி வரும் சந்திரதாஸ் (26) மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சம்பவத்தன்று வேலை பார்த்து வரும் நிறுவனத்தின் அருகே சென்றுள்ளனர். அப்போது அங்கு கிடந்த சில வயர்களை எடுத்து, அவற்றை தீ வைத்து எரித்து அதிலிருந்து தாமிரத்தை பிரித்தெடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பகுதியில் இருந்த சிலர், சந்திரதாஸ் மற்றும் அவரது நண்பர் வயர்களை எரிப்பதை பார்த்துள்ளனர். அவர்கள் இருவரும் திருடர்கள் என சந்தேகமடைந்த அந்த நபர்கள், இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.
பின்னர் ஏற்பட்ட தகராறில், அங்கு கூடிய கும்பல் சந்திரதாஸ் மற்றும் அவரது நண்பரை தாக்கியதாக கூறப்படுகிறது. ராவுத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள பாலத்தின் கீழ்பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது.
தங்களை திருடர்கள் இல்லை என்றும், இருகூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், அதனை ஏற்காமல் கும்பல் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்திரதாஸ், அங்கிருந்து தனது வீட்டு உரிமையாளர் ரமேஷை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து ரமேஷ் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களை தாக்கிய கும்பல் யார், எதற்காக தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
கோவை இருகூர் ராவுத்தூர் பகுதியில் திருடர்கள் என சந்தேகித்து வடமாநில தொழிலாளர்கள் இருவரை கும்பல் தாக்கிய சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





