கோவை: கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவற்றின் பசியை போக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளை குறைக்கும் வகையிலும் மாநகராட்சி சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்காக தனியாக இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கோவை மாநகராட்சி பகுதிகளில் சுமார் 1.11 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக மாநகராட்சி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 43 ஆயிரம் நாய்களுக்கு இதுவரை கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக சாலைகளில் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடையும் நிலை உள்ளது. மேலும், நாய்க்கடி சம்பவங்களும் தொடர்ந்து கவலை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தெருநாய்கள் உணவு தேடி சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வழங்கும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் செயல்பாடுகளை ஆய்வு செய்த பின்னர், மாநகரின் பிற பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வார்டிலும் அந்தந்த கவுன்சிலர்களுடன் ஆலோசனை நடத்தி, பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தாத பகுதிகளில் உணவு வழங்குவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.
தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தன்னார்வலர்கள் மூலம் தெருநாய்களுக்கு உணவு வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் தெருநாய்கள் உணவுக்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் சுற்றித்திரிவது குறையும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.
அதே நேரத்தில், மாநகராட்சி சார்பில் உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் இடங்களை தவிர்த்து, சாலைகள் மற்றும் பிற பொது இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெருநாய்களின் பசியை போக்குவதுடன், பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சம் மற்றும் தொந்தரவுகளையும் இந்த புதிய திட்டம் குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு கோவை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.





