பி.டி.உஷாவின் சாதனை முறியடித்த கோவை மங்கை… பெற்றோர்கள் நெகிழ்ச்சி…!

கோவை : கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 54.75 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பி.டி.உஷாவின் சாதனையையும் முறியடித்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

கோவை வழுக்குப்பாறையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்ராஜ் – மீனா தம்பதியின் மகள் வித்யா ராம்ராஜ். இவருக்கு சத்யா, நித்யா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இதில் வித்யாவும் நித்யாவும் இரட்டையர்கள். சிறுவயது முதலே இருவருக்கும் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.

ராம்ராஜ் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தில் பொருளாதார சிரமம் இருந்துள்ளது. மூன்று பெண் குழந்தைகளையும் படிக்க வைப்பதில் சிரமம் ஏற்பட்டபோதிலும், வித்யா மற்றும் நித்யாவின் விளையாட்டு ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இருவரையும் ஈரோடு விளையாட்டு விடுதியில் சேர்த்து 7-ம் வகுப்பு முதல் அரசு பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.

வித்யா, நித்யா இருவரும் பள்ளிப் பருவம் முதலே மாவட்டம், மாநிலம், தேசியம் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளனர். இவர்களின் திறமையை கவனித்த ஈரோட்டில் உள்ள கொங்கு கல்லூரி நிர்வாகம் இருவருக்கும் கட்டணமில்லா கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது.

Advertisement

கல்லூரியில் பிபிஏ படித்தபோதும் இருவரும் தடகளப் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று சாதனைகளை படைத்துள்ளனர். படிப்பை முடித்த பிறகு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் வித்யா ரயில்வே துறையிலும், நித்யா வருமான வரித்துறையிலும் பணியில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் 54.75 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டியில் பி.டி.உஷாவின் சாதனையை சமன் செய்திருந்த வித்யா, தற்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Advertisement

வித்யாவின் சாதனை குறித்து அவரது தாய் மீனா கூறுகையில், “எனக்கு சிறுவயதில் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் அதிகம். அதனால் என்னை அனைவரும் பி.டி.உஷா என்று அழைப்பார்கள். இன்று எனது மகள் வித்யா, பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் கனவை என் மகள் நனவாக்கியுள்ளார்.

மூன்று பெண் குழந்தைகளில் மூத்த மகள் சத்யாவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டோம். வித்யா, நித்யா இருவருக்கும் விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடர்ந்து ஊக்கம் அளித்தோம். இப்போது வித்யா சாதனை படைத்திருப்பதை நினைத்தால் சந்தோஷத்தில் குதிக்க வேண்டும் போல் இருக்கிறது. அவரது அப்பாவை இனி கையில் பிடிக்க முடியாது; இப்போதே அவர் ராஜா போல அமர்ந்திருக்கிறார்.

சாதனை என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது மாற்றத்திற்கு உட்பட்டது. இன்று எனது மகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். நாளை வரும் தலைமுறை இந்த சாதனையையும் முறியடித்து முன்னேறினால் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை” என்றார்.

வித்யாவின் தந்தை ராம்ராஜ் கூறுகையில், “இந்த வெற்றி சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பி.டி.உஷாவின் சாதனையை வித்யா சமன் செய்திருந்தார். தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கடுமையாக முயற்சி செய்து தற்போது அந்த சாதனையை முறியடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் ஓட்டுநராக பணியாற்றிய காலத்தில் எனது மகள்கள் கேட்ட ஷூவை கூட வாங்கிக் கொடுக்க முடியாத நிலை இருந்தது. அவர்களை முறையாக கவனித்து தேவையான வசதிகளை செய்து கொடுத்திருந்தால், அவர்கள் இன்னும் முன்பே இந்த சாதனையை எட்டியிருக்கலாம்.

மகள்களை விளையாட்டு விடுதியில் சேர்த்தபோது, குழந்தைகளை வளர்க்க முடியாமல் விடுதியில் சேர்த்துவிட்டதாக பலரும் பின்னால் பேசினர். ஆரம்பத்தில் அது கவலையாக இருந்தது. பின்னர் அவர்களின் பேச்சை பொருட்படுத்தாமல், எனது மகள்கள் மீது இருந்த நம்பிக்கையுடன் அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்தேன்.

இந்த காலத்தில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. ஒவ்வொரு குழந்தையின் திறமையையும் பெற்றோர் கண்டறிந்து, அதை வளர்த்தெடுக்க முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...