கோவை: கோவை விமான நிலையத்தின் இயக்கப் பகுதியில் அனுமதியின்றி டிரோன் பறக்கவிட்ட மர்ம நபர் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தின் இயக்கப் பகுதியில் கடந்த 1-ம் தேதி மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து டிரோனை இயக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் விமானப் போக்குவரத்து இயக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் அந்த நபர் செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி சந்திரன் (53), பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விமான நிலையத்தின் இயக்கப் பகுதியில் டிரோன் பறக்கவிட்ட நபர் யார்? எதற்காக டிரோனை இயக்கினார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும், சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.






