கோவை: ஜிபே மற்றும் பேடிஎம் போன்ற யுபுஐ ஆப்களின் மூலம் ரூ.2000க்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் 0.04% கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பது குறித்து விரிவாக காணலாம்.
யுபிஐ
மக்களிடையே தற்போது பணப்புழக்கம் என்பது முற்றிலும் குறைந்துவிட்டது. முன்பை விட இப்போது எல்லாம், அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டது. யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு மக்களிடையே சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. சாலையோர கடைகள் முதல் பெரிய பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் வரையில் அனைத்தும் யுபிஐ முறைக்கு மாறி விட்டன.

யுபிஐ அறிமுகமானதில் இருந்தே மக்களிடையே சில்லறை பிரச்சினை என்பது முற்றிலும் ஒழிந்துவிட்டது. ஒருவர் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரையில் அனுப்ப முடியும். பெரும்பாலான வங்கிகள் ஒருநாளைக்கு அதிகபட்சமாக 20 முறை மட்டுமே பணப்பரிவர்த்தனைக்கு அனுமதியளித்துள்ளன. ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை அனுப்பலாம்.
வரி செலுத்துதல்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை கட்டணங்கள், ஐபிஓ விண்ணப்பங்கள், ரிசர்வ் வங்கியின் சில்லறை நேரடி திட்டங்கள் போன்றவற்றிற்கான வரம்பு ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மூலதன சந்தைகள், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் தொகை மற்றும் காப்பீடு ஆகியவற்றிற்கு ரூ.5 லட்சம் தினசரி வரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளைப் பொறுத்து யுபிஐ பரிமாற்ற வரம்புகள் மாறுபடும். பெரும்பாலான வங்கிகள் தினசரி ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை வரம்பை வழங்கும் நிலையில், சில வங்கிகள் தினசரி வரம்புகளுக்குப் பதிலாக வாராந்திர அல்லது மாதாந்திர வரம்புகளை விதிக்கலாம்.
18,586 கோடி
2023-24 நிதியாண்டில் 13,122 கோடி பரிவர்த்தனைகளும், இதன் மதிப்பு ரூ.199.95 கோடியாகவும் உள்ளது. நாளுக்கு நாள் பணப்பரிவர்த்தனை அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேபோல, 2024-25 நிதியாண்டில் மட்டும் 18,586 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.260.56 லட்சம் கோடியாகும். 2025-26ம் ஆண்டில் இதுவரையில் 24,000 கோடிக்கும் அதிகமான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ. 314 லட்சம் கோடி ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரம் மடங்குக்கும் அதிகமான உயர்வாக உள்ளது.

இதில் நபருக்கு நபர் பரிவர்த்தனைகள் மொத்த யுபிஐ பரிவர்த்தனை அளவில் 37 சதவீதமாகும். அதேவேளையில், மொத்தத் தொகையில் 70 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளன. வணிகர்களுக்கான யுபிஐ பரிவர்த்தனைகளில் ரூ.2,000க்கு மேற்பட்டவை அளவின் அடிப்படையில் 4% மட்டுமே என்றாலும், மதிப்பின் அடிப்படையில் சுமார் மூன்றில் இரண்டு பங்காக உள்ளது.
23 நாடுகளில்
இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனை உலகளவில் விரிவுபடுத்தும் முயற்சிகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இலங்கை, பிரேசில், ஜமைக்கான, கென்யா, கியூபா குடியரசு, பப்புவா நியூ கினியா, கொலம்பியா குடியரசு,மாலத்தீவு, மங்கோவியா உள்பட 23 நாடுகளில் யுபிஐ பயன்பாட்டில் உள்ளன.
இனி கட்டணம்
இந்த நிலையில், 2,000 ரூபாய்க்கும் அதிகமான ஜிபே, பேடிஎம், கிரெட் போன்ற யுபிஐ ஆப்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகளுக்கு இனி 0.40 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
காரணம்
நாடு முழுவதும் 55 கோடிக்கும் அதிகமானோர் யுபிஐயைப் பயன்படுத்துகின்றனர். 703 நிறுவனங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும், இதற்கான உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புப் பராமரிப்புச் செலவுகள் ஆண்டுதோறும் சுமார் ரூ. 20,000 கோடியாக இருப்பதால், எம்டிஆர் (MDR) எனப்படும் வர்த்தகர் தள்ளுபடி விகிதம், (எம்டிஆர் என்பது டிஜிட்டல் கட்டணங்களைச் செயலாக்குவதற்காக வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணமாகும்) இல்லாத நிலை இந்த நிதி சுற்றுச்சூழல் அமைப்பை நிதி ரீதியில் நிலைத்தன்மையற்றதாக மாற்றுகிறது என்று நாடாளுமன்ற நிதிநிலைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப் பரிவர்த்தனை கட்டமைப்பை பாதுகாப்பாக மாற்றும் நோக்கில், இந்தக் கட்டண நடைமுறை அமலுக்கு வருகிறது.

கணிசமான பரிவர்த்தனை வளர்ச்சியைக் கையாள இணையப் பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு முறைகளைத் தொடர்ந்து மேம்படுத்துதல், சந்தை விரிவாக்கத்தை ஊக்குவித்தல், மற்றும் மானியங்களை மட்டுமே நம்பியிராமல் எதிர்கால வளர்ச்சிக்கான நிலையான வருவாய் மாதிரியை உருவாக்குதல் ஆகிய முக்கிய காரணங்களை மத்திய அரசு முன்வைத்துள்ளது.
ரூ.2000 அனுப்பினால் கட்டணமா?
இந்தக் கட்டணம் அனைத்து தரப்பினருக்கும் கிடையாது. வணிகர்களுக்குச் செய்யப்படும் ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ செலுத்தல்களுக்கு 0.4 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும்.
தொகையைப் பொருட்படுத்தாமல், நபருக்கு நபர் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு கட்டணமும் இல்லை.
ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2,000க்கு உட்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை.
ரயில் டிக்கெட், பெட்ரோல்…
ரயில்வே, டெலிகாம், காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியத் துறைகளில் ரூ.2,000க்கு மேற்பட்ட செலுத்தல்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு நிலையான ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ், செக்யூரிட்டீஸ் மற்றும் பங்குத் தரகர்களுக்கு 0.02% கட்டணம் விதிக்கப்பட்டு, அது அதிகபட்சமாக ரூ.300 ஆக வரம்பிடப்பட்டுள்ளது.
சிறிய வணிகர்களுக்கு விலக்கு
ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபர் பரிவர்த்தனை வகையின் கீழ் யுபிஐ க்யூஆர் கோடுகள் மூலம் மாதத்திற்கு ரூ. 1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு தொடர்ந்து பூஜ்ய கட்டணம் நடைமுறையில் இருக்கும்.

இது தவிர வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. யுபிஐ செயலிகள் பிளாட்ஃபார்ம் கட்டணங்கள் எதையும் வசூலிக்க அனுமதி இல்லை. மேலும், வணிகர்கள் இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது திணிக்கக் கூடாது என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு வரம்பற்ற இலவச யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து கிடைக்குமம், இவ்வாறு மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
எனவே, யுபிஐ புதிய கட்டண முறையில் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், உங்களிடம் கூடுதல் தொகையை வசூலிக்கும் வாடிக்கையாளர்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.




