கோவை : கல்லூரி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட ‘கல்வியே முதன்மை’ திட்டத்தின் மூலம், மாணவர்கள் தொடர்பான குற்றச்சம்பவங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்க, மாநகர காவல்துறை சார்பில் ‘கல்வியே முதன்மை’ என்ற சிறப்பு ஒருங்கிணைப்பு திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. கல்லூரி நிர்வாகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, அவர்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுப்பதே போலீசாரின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இதற்காக கோவை மாநகரில் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் போலீசார் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவர்களின் வருகைப்பதிவில் திடீரென ஏற்படும் மாற்றம், கல்வி செயல்திறன் குறைவது, நடவடிக்கைகளில் மாற்றம், சமூக வலைதளங்களில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை கல்லூரி நிர்வாகங்கள் கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குற்றப்பின்னணி கொண்ட நபர்களுடன் மாணவர்கள் தொடர்பில் இருக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அவர்களிடம் காணப்படும் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிந்து, தேவையான ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அவர்களை குற்றச்செயல்களில் இருந்து தடுக்க முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரிக்கு வெளியே தனியாக அறை எடுத்து தங்கும் மாணவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அவர்கள் யாருடன் தங்குகிறார்கள், யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் கல்லூரி நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றப்பின்னணி கொண்ட வெளிநபர்கள் அல்லது முன்னாள் மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கியிருப்பது தெரியவந்தால், அது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கும் தகவல் அளித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மாணவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, குற்றச்செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகங்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த கண்காணிப்பு பணிகளில் அலட்சியம் காட்டும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.






