கோவை: கோயம்புத்தூர் விமான நிலையத்தின் புதிய இயக்குனராக எஸ்.தர்மராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தின் புதிய இயக்குனராக எஸ்.தர்மராஜ் பொறுப்பேற்றுள்ளார்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் மற்றும் விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் விளக்கினார்.
கோயம்புத்தூர் விமான நிலைய அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விமான நிலையத்தின் இயக்குனராக பொறுப்பேற்றுள்ள எஸ்.தர்மராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, 1995 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் எலக்ட்ரானிக்ஸ் அதிகாரியாக பணிபுரிந்துள்ளேன், 2009 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் இயக்குனராக பொறுப்பேற்று சர்வதேச விமான போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மேற்கொண்டுள்ளேன், மேலும் சென்னை, மும்பை, கல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களிலும் பணியாற்றியுள்ளேன் என்றார்.
ஐ எஸ் ஆர் ஓ ஆராய்ச்சி நிலையத்திலும் பணிபுரிந்துள்ளேன். குறிப்பாக டிஜி யாத்ரா சேவை அமல்படுத்துவதில் பணிபுரிந்துள்ளேன்.
இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு மண்டலத்தின் முக்கிய நகரமாக உள்ள கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இயக்குனராக பொறுப்பேற்றுள்ளேன். விமான நிலையத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. குறிப்பாக விமான நிலைய விரிவாக்க பணிகளைப் பொறுத்தவரை சுமார் 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள 27 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கார் பார்க்கிங் இடவசதி அதிகப்படுத்துதல் மற்றும் கார்கோ சேவை பகுதியை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை விமானத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகளை அதிகப்படுத்தும் வகையில் விமான நிறுவனங்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். மேலும் கோவையைச் சேர்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களிடம் கலந்து ஆலோசித்து கார்கோ சேவையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
டிஜி யாத்ரா சேவை குறித்து விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கப்பட்டு, பயணிகள் டிஜி யாத்ரா சேவையை அதிகளவில் பயன்படுத்த வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.






