கோவை மண்டலத்தில் 2,524 வழக்குகள் பதிவு! சமையல் சிலிண்டர் பதுக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

கோவை : கோவை மண்டலத்தில் நடப்பாண்டில் 2,524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக 4,054 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதேபோல், விவசாயிகளுக்காக மானிய விலையில் உரங்களும், வீட்டு உபயோகத்திற்காகச் சமையல் எரிவாயு சிலிண்டர்களும் வழங்கப்படுகின்றன.

Advertisement

இந்தப் பொருட்களைச் சட்டவிரோதமாகப் பதுக்குதல், கடத்துதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் மற்றும் பிற தேவைகளுக்குப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களைத் தடுக்கும் பணியில் தமிழ்நாடு காவல்துறையின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஈடுபட்டு வருகிறது.

இந்தத் துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா தலைமையில் நான்கு மண்டலங்களாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மண்டலமும் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், சரகங்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும், மாவட்ட அலகுகள் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும் செயல்படுகின்றன.

Advertisement

Also Read: சிம்னி விளக்குகளுடன் கவுன்சிலர்கள் போராட்டம்- கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு…

இதில், கோவை மண்டலத்தின் கீழ் நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 9 மாவட்ட அலகுகள் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், கோவை மண்டலத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குதல், கடத்துதல் மற்றும் சட்டவிரோதமாகப் பிற தேவைகளுக்குத் திருப்பிவிடுதல் தொடர்பாக மொத்தம் 2,524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களைக் கைது செய்ததுடன், சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Also Read: சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் கார் மோதி முதியவர் உயிரிழப்பு!

இதில், வீட்டு உபயோகத்திற்காக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் அடிப்படையில் மொத்தம் 4,054 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிலிண்டர் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனை தொடர்பாகக் கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் (33) என்பவர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் கள்ளச்சந்தைத் தடுப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைப்பது மற்றும் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் பதுக்கல் தொடர்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக இருவர் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உரங்களைச் சட்டவிரோதமாகப் பிற மாநிலங்களுக்குக் கடத்துவது மற்றும் வணிக நோக்கங்களுக்காகத் திருப்பிவிடுவது தொடர்பாகவும் கோவை மண்டலத்தில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, விவசாயிகளுக்காக வழங்கப்படும் மானிய விலை உரங்கள் கேரள மாநிலத்திற்குப் பல்வேறு வணிக நோக்கங்களுக்காகக் கடத்தப்படுவது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக நடப்பாண்டில் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மொத்தம் 1,014.435 மெட்ரிக் டன் மானிய விலை உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரக் கடத்தல் வழக்கில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Also Read: சிம்னி விளக்குகளுடன் கவுன்சிலர்கள் போராட்டம்- கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு…

மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உரக் கடத்தல் வழக்கில் ஒன்றிய அரசின் மானிய விலையில் வழங்கப்படும் 34,200 கிலோ உரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சுதீஷ், ஹுசைன், ஷானூப் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மானிய விலையில் வழங்கப்படும் பொது விநியோகத் திட்டப் பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் உரங்களைச் சட்டவிரோதமாகப் பதுக்குதல், கடத்துதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...