கோவை: கோவை மாநகரின் முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் நடைபயிற்சித் தலமாக விளங்கும் வாலாங்குளம் பகுதியில், பெண்கள் அணியும் உள்ளாடைகள் மற்றும் சேலைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டு நடைபயிற்சிக்கு வருவோர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், அப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை வாலாங்குளம், அழகுபடுத்தப்பட்ட குளக்கரைகள் மற்றும் நடைபாதைகளைக் கொண்ட முக்கியப் பகுதியாக உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குடும்பத்தினர் நடைபயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்கவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் வாலாங்குளம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட ஒருவர், அங்குள்ள நடைபாதைகள் மற்றும் புதர்ப் பகுதிகளில் பெண்கள் அணியும் உள்ளாடைகள் மற்றும் சேலைகள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பத்துக்கும் மேற்பட்ட பெண்களின் மேல் உள்ளாடைகள் உள்ளிட்ட ஆடைகள் அப்பகுதியில் கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவர் புகைப்படம் மற்றும் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஒரே பகுதியில் அதிக அளவில் பெண்களின் ஆடைகள் கிடப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வாலாங்குளத்துக்கு குடும்பத்தினருடன் வரும் பொதுமக்கள், இத்தகைய காட்சிகளைக் காணும்போது அதிருப்தியும் அச்சமும் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் ஏதேனும் ஒழுங்கீனமான செயல்கள் நடைபெறுகிறதா அல்லது ஆடைகள் அங்கு கிடப்பதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மாநகரின் முக்கியப் பொழுதுபோக்குத் தலமாக விளங்கும் வாலாங்குளம் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பையும், சுற்றுப்புறத் தூய்மையையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளக்கரையை ஒட்டிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், பெண்களின் ஆடைகள் அங்கு கிடப்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Video
எனினும், இந்தச் சம்பவத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகாத நிலையில், சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
கோவை வாலாங்குளம் பகுதியில் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் சேலைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






