கோவை: கோவை பட்டேல் சாலையில், மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய VEE VEE ஆம்னி பேருந்து நிறுவன ஊழியர்கள், தட்டிக்கேட்ட இளம் பெண்களை ஆபாசமாகப் பேசிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பட்டேல் சாலையில் ‘Vee Vee Bus’ என்ற தனியார் ஆம்னி பேருந்து நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயுத பூஜை கொண்டாட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, சில ஊழியர்கள் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்து ஒன்று அலுவலகத்தின் முன்பு நிறுத்துவதற்காக வந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்தச் சாலையில் பேருந்தைத் திருப்ப முயன்றபோது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது, சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த இரண்டு இளம் பெண்கள் மீது பேருந்து மோதும் வகையில் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள், பேருந்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். அப்போது, பேருந்தை பின்னோக்கி இயக்குவதற்கு வழிகாட்டிக் கொண்டிருந்த மதுபோதையில் இருந்த ஊழியர், பெண்களிடம் மன்னிப்புக் கேட்பதற்குப் பதிலாக ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.
மேலும், தன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறி மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த பெண்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.
வீடியோ
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த தனியார் ஊடக நிருபர் ஞானசேகரன், தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதைக் கவனித்த பேருந்து நிறுவனத்தின் மற்ற ஊழியர்கள், நிருபர் வீடியோ எடுப்பதை மதுபோதையில் இருந்த நபரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆத்திரமடைந்த அந்த நபர் நிருபர் ஞானசேகரனிடம் சென்று தகராறில் ஈடுபட்டதுடன், அவரது செல்போன் மற்றும் வாகனத்தைப் பறித்துக்கொண்டு தாக்க முயன்றதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் பெண்களிடமும், செய்தி சேகரிக்கச் சென்ற நிருபரிடமும் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாகப் பாதிக்கப்பட்ட நிருபர் ஞானசேகரன், கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






