கோவை: கோவை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மண்டலங்களுக்கு தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் l தலைமையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் மேற்கொள்ள வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையாளர், வடகிழக்குப் பருவமழையையொட்டி அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தனியார் நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மழைக்கால அவசரகால நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் ஜெனரேட்டர்கள், மோட்டார்கள், பம்புகள் உள்ளிட்ட உபகரணங்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்துவதுடன், கூடுதல் பணியாளர்களை நியமித்து மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரண வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கவும் ஆணையாளர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மேற்கு மண்டலம் 34-வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், ராஜீவ் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






