கோவை: கோவையில் தற்பொழுது உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2027-ஐ முன்னிட்டு, தற்போதுள்ள 3,563 வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பான பணிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி, கோவை மாவட்டத்தில் புதிதாக 8 வாக்குச்சாவடிகள் உருவாக்கவும், 49 வாக்குச்சாவடிப் பிரிவுகளை மறுசீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 8 வாக்குச்சாவடிகளை ஒன்றிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மறுசீரமைப்புக்குப் பிறகும் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,563 ஆகவே இருக்கும். வாக்குச்சாவடிகளின் இடமாற்றம் அல்லது பெயர் மாற்றம் எதுவும் தற்போது முன்மொழியப்படவில்லை.
வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பான வரைவு பட்டியல் கடந்த 19-ஆம் தேதி கோவை மாவட்ட இணையதளத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக அறிவிப்புப் பலகையிலும், 10 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது புதிய கோரிக்கைகள் இருந்தால், வரும் திங்கட்கிழமைக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடிகளைத் திருத்தியமைக்கும் பணிகள் நவம்பர் 2-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட உள்ளன. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து, நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும்.
பெறப்படும் விண்ணப்பங்கள் மீதான தீர்வு டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






