கோவை: கோவையில் இன்று முதல் 3 நாட்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் மகளிர் சுயஉதவிக் குழுப் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தாளியூரில் உள்ள அனன்யா நானா நானி அடுக்குமாடிக் குடியிருப்பில் (Phase-3), மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இன்று (அக்.22) முதல் 24-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ‘அடுக்குமாடி குடியிருப்பு கண்காட்சி’ (Apartment Bazaar) நடைபெற உள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், கிராமப்புற உற்பத்தியாளர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதும் இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், 40-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று, தாங்கள் தயாரித்த பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளனர்.
இதில் கைவினைப் பொருட்கள், ஆயத்த ஆடைகள், மூலிகைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், சிறுதானிய உணவுப் பொருட்கள், பல்வேறு வகையான எண்ணெய்கள், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.
தரமான மற்றும் ஆரோக்கியமான பொருட்களை பொதுமக்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளிலேயே எளிதாக வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதுடன், பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.
எனவே, பொதுமக்கள் கண்காட்சியில் பங்கேற்று மகளிர் சுயஉதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை வாங்கிப் பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.






