கோவை : கோவை மாணவர் அகிலன் தற்கொலை விவகாரத்தில் ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவர் அகிலன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கோவையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த மாணவர் அகிலன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவரின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்றும், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த மூன்று நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இச்சம்பவம் தொடர்பாக மாவட்டப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கையைத் தொடர்ந்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் அருண்குமார் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.






