கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று (அக்.25) தற்காலிகமாக மூடப்படுவதாக கோவை வனக்கோட்டம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் அருவி விளங்கி வருகிறது. இங்கு கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஒரு நாள் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்திருந்தது.
இதனிடையே, மழை தொடர்வதாலும், அருவியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதாலும், இன்று ஒரு நாள் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இன்று கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல அனுமதி இல்லை.
இதற்கிடையே, சாடிவயல் யானைகள் முகாம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.
வீடியோ காட்சிகள்
கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: பல்லடத்தில் காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலி!






