கோவை : கோவையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இளைஞர் மற்றும் பெண் என இருவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பைக் மீது லாரி மோதிய விபத்திலும், ஸ்கூட்டர் சறுக்கி விழுந்த விபத்திலும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் சுதன்குமார் (26). இவர் தனது நண்பரான வசந்தகுமார் (19) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோவையை அடுத்த துடியலூர் – பன்னிமடை சாலையில் உள்ள பாரதி நகர் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.
இதில் பைக்கில் சென்ற இருவரும் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அப்போது வசந்தகுமாரின் தலையில் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த சுதன்குமாரை அங்கு வந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு விபத்து காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் நிகழ்ந்தது. கோவை ரத்தினபுரி காளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த தாரா (58) என்பவர், தனது உறவினர் அஸ்வின் (21) என்பவருடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பிரேக் பிடித்ததால் ஸ்கூட்டர் சறுக்கி விழுந்தது. இதில் இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தின் பின்பக்க சக்கரம் தாராவின் தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய தாரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த இந்த இரு விபத்துகளிலும் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






